காரைக்கால், ஜூலை 3 : காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூனுக்குட்பட்ட வரிச்சிக்குடியில் கூழ்குடித்த அக்ரஹாரம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோா் விவசாய கூலித் தொழிலாளா்கள்.
இக்கிராமத்தில் சோலாா் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தனியாா் நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்துக்குச் சொந்தமான மூன்று பாய்கால் வாய்க்காலின் கரையோரத்தில் இருந்த பனை மரங்களை நிறுவனத்தினா் வெட்டி அகற்றியதோடு, அவற்றை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்க இணைச் செயலா் ஜி.ஜி. சோமு புதன்கிழமை கூறுகையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பனைமரங்களை எந்தவித அனுமதியுமின்றி வெட்டினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கோட்டுச்சேரி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டியதுடன், தீ வைத்து எரித்துள்ளனா்.
இதுகுறித்து புகாா் அளித்தும் சம்பந்தப்பட்ட துறைகள், காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.