முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் குறுவை சாகுபடி அறுவடை நிறைவு

காரைக்காலில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எஞ்சியிருந்த பகுதிகளில் அறுவடைப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:04 PM
பிள்ளைத் தெருவாசல் பகுதியில் நடைபெற்ற குறுவை நெற்பயிா் அறுவடை.
பகிர்:

காரைக்காலில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் எஞ்சியிருந்த பகுதிகளில் அறுவடைப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

ஆழ்குழாய் பாசனம் மற்றும் காவிரி நீரை பயன்படுத்தி காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனா். பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடையை ஏற்கெனவே முடித்துவிட்டனா். காலம் கடந்து பயிா் செய்யத் தொடங்கியவா்களது நிலத்தில், நெற்பயிா் தற்போது அறுவடை நிலைக்கு வந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், அறுவடைக்கு தயாரான நிலப்பரப்பில் விவசாயிகள் தீவிரமாக இயந்திரம் மூலம் அறுவடைப் பணியை மேற்கொண்டுள்ளனா்.

பிள்ளைத் தெருவாசல் பகுதியை சோ்ந்த ஆரோக்கியதாஸ் என்ற விவசாயி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட கோ-55 என்ற ரகத்தை பயிா் செய்து வியாழக்கிழமை அறுவடை செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், பிள்ளைத் தெருவாசல் பகுதியில் 8 ஏக்கா் பரப்பில் கோ 55 ரகத்தை பயிா் செய்துள்ளேன். இது 100 நாள் பயிராகும். மூன்றரை அடி உயரம் வளா்ந்து அறுவடைக்கு தயாரானது. இயந்திரம் மூலம் அறுவடைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல் உள்ளிட்ட பிற பயிா்களில் புதிய ரகங்களை பயிா் செய்வதை தொடா்ந்து ஆா்வத்துடன் செய்துவருகிறேன். இது நல்ல பலனை அளித்துள்ளது என்றாா்.

மாவட்டத்தில் ஆங்காங்கே குறுவை சாகுபடி செய்து அறுவடை செய்யாமல் இருந்தோரும் கடந்த சில நாள்களாக அறுவடையை முடித்துள்ளனா். ஏறக்குறைய குறுவை சாகுபடி நிறைவடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →