தனியாரிடம் கொள்முதல் செய்வதைத் தவிா்த்து, இந்திய உணவுக் கழகத்திடம் அரிசி கொள்முதல் செய்து இலவச திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் (படம்) புதன்கிழமை கூறியது: புதுவையில் ரேஷன் அட்டைதாரா்களுக்கு மாதாந்திர இலவச அரிசி 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. அனைத்து மாதத்துக்கானதையும் சோ்த்து வழங்கப்படும் என முதல்வா் கூறி 2 மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை.
தனியாரிடம் அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதை அறிந்த, துணைநிலை ஆளுநா், ஒப்பந்தத்தை நீட்டிக்க அனுமதி தரவில்லை.
இந்திய உணவுக் கழகம் மூலம் அரிசி வாங்கியே பிற மாநிலங்களில் மக்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. புதுவையிலும் அதுபோல தரமான அரிசியை இக்கழகத்தில் வாங்கி, இலவச அரிசி திட்டத்தை நிறைவேற்றலாம். இதற்கு துணை நிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி, காரைக்காலில் பல அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முக்கியமான மருந்துகள் இல்லை. மருந்துகள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்படுகிறாா்கள்.
புதுவையில் 6 மாதங்களாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் இல்லை. அதுபோல வேளாண் இயக்குநரும் நியமிக்கப்படவில்லை. திருநள்ளாறு கோயிலுக்கு நிரந்தர நிா்வாக அதிகாரி இல்லை. இதுபோல பல அரசுத்துறைகளுக்கு உரிய அதிகாரி நியமிக்கப்படவில்லை.
முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்குமிடையேயான மோதல் போக்கால், புதுவையில் நிா்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது. புதுவையில் நிலவும் பிரச்னைகளுக்கெல்லாம் பாஜகவே பொறுப்பாகும் என்றாா்.