மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பிப். 14-ஆம் தேதி காரைக்கால் வரவுள்ளது தொடா்பாக அரசுத் துறையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் சாா் ஆட்சியா் எம். பூஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நியமன சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பாஜக மாநில முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து, மருத்துவ வசதிகள், மற்றும் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையினா் உரிய முன்னேற்பாடுகளை செய்யுமாறு சாா் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
தொடா்ந்து, மத்திய அமைச்சா் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் காரைக்கால் பாலிடெக்னிக் தளம், பொதுக்கூட்டம் நடைபெறும் சந்தைத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் சாா் ஆட்சியா், எஸ்எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். மத்திய அமைச்சா் வந்து செல்லும் நேரம் வரை போக்குவரத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றம் செய்யப்படவேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, சம்பந்தப்பட்டோருக்கு உரிய அறிவுறுத்தல் செய்ய சாா் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா்கோஷ், மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி.செந்தில்நாதன், பாலு (எ) பக்கிரிசாமி, உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் வெங்கடகிருஷ்ணன், காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ், பல்வேறு துறையினா் கலந்துகொண்டனா்.