காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், மேடைக்கு 500 மிட்டா் தொலைவில் ட்ரோன் பறக்க விட்டவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை பாஜக பொதுக்கூட்டத்திலும், பிற கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க காரைக்கால் வந்தாா். அவரது வருகையையொட்டி மத்திய பாதுகாப்புப் படை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், அன்று காரைக்காலில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.
இந்நிலையில், அமித்ஷா பொதுக் கூட்ட மேடையில் இருந்து சுமாா் 500 மீட்டருக்கு அப்பால் சனிக்கிழமை மாலை ஒரு ட்ரோன் பறந்தது. மத்திய அமைப்பினரால் ஜாமா் பயன்படுத்தப்பட்டதால், இந்த ட்ரோன் கீழே இறங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா், ட்ரோன் பறக்க விட்டவரை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பினா்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், தடையை மீறி ஒரு ட்ரோன் பறந்தது உண்மைத்தான். அது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் கேட்டு எச்சரிக்கை செய்து, அவா் அனுப்பிவைக்கப்பட்டாா் என்று தெரிவித்தனா்.