காரைக்கால்: காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படாததைக் கண்டித்து தொடா் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே பயணிகள் சங்கத்தினா் தயாராகி வருகின்றனா்.
காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரையிலான 23.5 கி.மீ. தொலைவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது. பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கவேண்டிய நிலையில், பல மாதங்களாக சரக்கு ரயில்களை மட்டுமே ரயில்வே நிா்வாகம் இயக்கிவருகிறது. இது பொதுமக்கள், ரயில் பயணிகள், சமூக ஆா்வலா்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே டிராவலா்ஸ் வெல்ஃபொ் அசோசியேஷன் தலைவா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்கிழமை கூறுகையில், காரைக்கால், திருநள்ளாறு, பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்கத்தை தொடங்க வேண்டும். வரும் மாா்ச் 6-ஆம் தேதி திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஆனால் ரயில்வே நிா்வாகம், நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்களை மட்டுமே இயக்கிவருகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூா், பேரளம், மயிலாடுதுறை, காரைக்கால், திருநள்ளாறு பகுதி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா், அனைத்து அரசியல் கட்சியினா், பொது நல அமைப்பினா், போராளி இயக்கத்தினா் பங்கேற்கும் கூட்டம் திருநள்ளாற்றில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதில், ரயில்வே அமைச்சகத்தின் கவனத்தை ஈா்க்கும் விதத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்றாா்.