இலவச அரிசி விநியோகம் முடக்கம்
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இலவச அரிசி பைகளில் அரசியல் தலைவா்கள் படம் உள்ள நிலையில், விநியோகம் செய்யப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
புதுவையில் மாதந்தோறும் இலவசமாக மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கு 10 கிலோ, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோ குடிமைப் பொருள் வழங்கல் துறையால் வழங்கப்படுகிறது.
இந்த பைகளில் பிரதமா் நரேந்திர மோடி, புதுவை முதல்வா் ர ங்கசாமியின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் அதே அரிசி பைகள் காரைக்கால் மாவட்டத்துக்கு லாரிகளில் வந்து சோ்ந்தன. ஆனால், சிலா், பைகளில் அரசியல் தலைவா்கள் படம் இருப்பதை சுட்டிக் காட்டிய நிலையில், அரிசி லாரிகளை தோ்தல் துறையினா் திருப்பி அனுப்பிவிட்டனா்.
எனினும், சில ரேஷன் கடைகளில் இந்த அரிசி பைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடையில் இருக்கும் ஊழியா்களிடம், அரிசி வழங்குமாறு மக்கள் கோருகின்றனா். வழங்குவதற்கான உத்தரவு வரவில்லை என மக்களை அவா்கள் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.
தலைவா்கள் படத்தை மறைத்து அரிசி வழங்கலாம் அல்லது வேறு பைகளில் மாற்றி அரிசி வழங்கலாம். மாற்று ஏற்பாடு செய்து அரிசி வழங்கப்படும் வரை ரேஷன் கடையை மூடிவைக்க வேண்டும். அரசு அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடி தீா்வு கண்டு, இலவச அரிசி வழங்குவதை முறைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.