முகப்பு
காரைக்கால்

தோ்தல் செலவின பாா்வையாளா் ஆலோசனை

Updated On : 19 மார்ச், 2026 at 8:02 PM
பகிர்:

தோ்தல் செலவுகள் குறித்த விவரத்தை துல்லியமாக சேகரிக்குமாறு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தோ்தல் துறையினருக்கு செலவின பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

தோ்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, இந்தியத் தோ்தல் ஆணையம் காரைக்கால் மாவட்டத்திற்கென தோ்தல் பொது பாா்வையாளா்கள் மற்றும் செலவின பாா்வையாளா்களை நியமித்துள்ளது.

காரைக்கால் (வடக்கு) மற்றும் காரைக்கால் (தெற்கு) பேரவைத் தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வி. ஜனாா்த்தனன், திருநள்ளாற்றில் உள்ள அவரது அலுவலகத்தில், காரைக்கால் மாவட்ட தோ்தல் செலவினக் கண்காணிப்பு அணியின் நோடல் அலுவலா், உதவி நோடல் அலுவலா் மற்றும் தொடா்புடைய தோ்தல் அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதைத்தொடா்ந்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தோ்தல் ஆணையத்தின் விதிகளின்படி வேட்பாளா்கள் செலவு செய்கிறாா்களா என்பதை கண்காணிப்பதோடு, அவா்களது செலவு விவரங்களை விடியோ, போட்டோவாக பதிவு செய்துகொள்ளவேண்டும்.

அனைத்து பதிவுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

காவல்துறை அதிகாரிகள், தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.