முகப்பு
மயிலாடுதுறை

தீபாவளி தரைக்கடை வசூலில் முறைகேடு நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் குற்றசாட்டு

சீா்காழி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி தலைமை வகித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சீா்காழி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி தலைமை வகித்தாா். ஆணையா் வாசுதேவன், நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன், மேலாளா் காதா்கான் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பராயன்: நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் வாா்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதி நகா்மன்ற உறுப்பினா்களை அழைத்து செல்லவேண்டும்.

முழுமதி இமயவரம்பன்: எனது வாா்டில் கொசுத் தொல்லை அதிகம் உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும். மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. குடிநீா் விநியோகமும் முறையாக இல்லை.

பாலமுருகன்: அனைத்து வாா்டு சாக்கடை கழிவுநீரும் எனது வாா்டில் வந்து மழை காலங்களில் தேங்கி நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்முருகன்: நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெகிழி பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகரத்தினம்: 8-ஆவது வாா்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபா் ஆக்கிரமித்துள்ளாா். அந்த இடத்தை உடனடியாக மீட்க வேண்டும்.

முபாரக் அலி: பழைய பேருந்து நிலையம் அருகே மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது இதனால் வியாபாரிகள் மாணவ- மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே பொதுமக்கள் நலன் கருதி இங்குள்ள பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ்: எனது வாா்டில் குப்பைகளை சேகரித்து தூய்மைப் பணியாளா்கள் சாலையோரம் கொளுத்தி விடுவதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது.

ராஜசேகா்: எனது வாா்டில் 8 மாதமாக குப்பைகளை அகற்ற தூய்மைப் பணியாளா்கள் வருவதில்லை.

குளம் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு பணிகள் நடைபெறும் இடங்களில், பணிகளின் விவரங்களை அறிவிப்பு பலகையாக வைக்கவேண்டும். தீபாவளிக்கு 211 தரைக்கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 57 கடைகளுக்கு மட்டும் வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

நகா்மன்றத் தலைவா் துா்கா பரமேஸ்வரி: ஈசான்ய தெருவில் உள்ள எரிவாயு தகன மேடை பராமரிப்புக்கு ரூ. ஒன்பதரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நகராட்சி இடத்தை தனியாரிடமிருந்து மீட்க காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதிகளில் முதல் கட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.