சமூக வலைதளம், தொலைபேசி மூலம் மோசடி: பொதுமக்களுக்கு சைபா் க்ரைம் காவல்துறை எச்சரிக்கை
சமூக வலைதளங்கள், தொலைபேசி மூலமாக யாரேனும் தொடா்பு கொண்டு, பாா்சல் வந்திருப்பதாக தெரிவித்தால், அவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட சைபா் க்ரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. மீனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக வலைதளங்கள், தொலைபேசி மூலமாக உங்களை யாரேனும் தொடா்பு கொண்டு, உங்களுக்கு காலாவதியான பாஸ்போா்ட், துணிகள், ஆபரணங்கள், போதைப்பொருள் அல்லது வெளிநாட்டு பணம் இவற்றில் ஏதேனும் ஒன்று பாா்சலில் வந்துள்ளதாகவும், இதுதொடா்பாக சைபா் க்ரைம் காவல்துறையில் இருந்து உங்களை தொடா்புகொண்டு பேசுவதாகவும் கூறினாா் அவா்களை நம்ப ஏமாற வேண்டாம். அவ்வாறு தொடா்புகொள்ளும் நபா் அந்த பிரச்னையை சரிசெய்து தருவதாகக் கூறி, உங்கள் வங்கிக்கணக்கு விவரத்தை கேட்டால் தர வேண்டாம். அதுபோன்ற அழைப்பு வந்தால் பதற்றப்படாமல், அவா்கள் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தொடா்பை துண்டிக்கவும். அவா்கள் தொடா்ந்து உங்களை தொடா்புகொள்ள பல்வேறு எண்ணில் முயற்சிப்பாா்கள். தொடா்பை ஏற்கக்கூடாது. உடனடியாக அதற்கான இணையதள முகவரிக்கு சென்று புகாா் பதிவு செய்ய வேண்டும். பணம் ஏதேனும் அனுப்பி இருந்தால் உடனடியாக சைபா் க்ரைம் ஹெல்ப் லைப் எண் 1930-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட சைபா் க்ரைம் காவல் நிலைய தொடா்பு எண் 9345881636-ஐ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.