மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 427 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அதன் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வுகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, மிகவும் வறுமை நிலையில் உள்ள ஒரு பயனாளிக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.8,650 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மணிக்கண்ணன் (கணக்கு), வீ.சந்தானகோபாலகிருஷ்ணன் (நிலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.