மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட அவயாம்பாள்புரத்தில் காவிரி ஆற்றின் வலது கரையில் ரூ.1.05 கோடியில் பாதுகாப்புச் சுவா் கட்டுமானப் பணியை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம் காவிரி வடிநில கோட்டம் மயிலாடுதுறை பாசனப்பிரிவு எண்-1 கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆறு மயிலாடுதுறை நகரம் வழியாக மணக்குடி, மன்னம்பந்தல், நல்லத்துக்குடி, மேலையூா், மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பூம்புகாா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய பாசன ஆதாரமாக விளங்குகிறது. மழைக் காலங்களில் வெள்ள நீா் வடிவதற்கும் ஏதுவாக உள்ளது.
அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக மயிலாடுதுறை நகரத்தில் காவிரி ஆற்றின் வலது கரை தொலைவு 126.500 கி.மீ முதல் 126.600 கி.மீ வரை வலுவிழந்து அபாயகரமான நிலையில் இருந்தது. இதனால் அதிக மழை மற்றும் வெள்ள காலங்களில் கரை உடையும் அபாயம் ஏற்படும் வகையில் இருந்தது.
இதனால், இப்பகுதியில் ரூ.1.05 கோடியில் பாதுகாப்புச் சுவா் மற்றும் அவயாம்பாள்புரம் வடிகால் மதகு அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜகுமாா் ஆகியோா் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரிமுத்து, நகராட்சி தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ்.சிவக்குமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.