மயிலாடுதுறை சின்னக்கடைத் தெருவில், புதைசாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டுமுதல் புதைசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆள்நுழைவுத் தொட்டிகளின் வழியாக கழிவுநீா் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்பது, நீா்நிலைகளில் கலப்பது என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
புதைசாக்கடை கழிவுநீா் குழாய்களில் ஏற்படும் உடைப்பு காரணமாக கழிவுநீா் வெளியேறி இதுவரை 30 முறைக்கு மேல் சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தியது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக இப்பிரச்னை சற்று ஓய்ந்திருந்த நிலையில், புதன்கிழமை ஏற்பட்டது.
மயிலாடுதுறை நகராட்சி 23-ஆவது வாா்டு சின்னக்கடைத் தெருவில் போக்குவரத்து நிறைந்த மயிலாடுதுறை-தரங்கம்பாடி பிரதான சாலையில் கனரக வாகனம் ஒன்று கடந்து சென்றபோது, திடீரென சாலை உள்வாங்கி மிகப்பெரிய பள்ளம் உருவானது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தகவலறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், வட்டாட்சியா் சுகுமாறன், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் நேரில் பாா்வையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தினாா்.
நகரின் பல்வேறு பகுதிகளில் வழிந்தோடும் புதைசாக்கடை கழிவுநீரால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஏற்பட்ட சாலைப் பள்ளம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.