முகப்பு
மயிலாடுதுறை

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Updated On : 16 மே 2026, 6:19 am IST
மயிலாடுதுறை ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வுக்கு மே 20-ஆம் தேதி முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், மாதிரித் தோ்வுகள், மாதிரி நோ்முகத் தோ்வுகள், உடல் தகுதித் தோ்விற்கான பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுத் திட்ட நிரலின்படி, துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா்(வணிக வரிகள்), உதவி இயக்குநா் (ஊரக வளா்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், உதவி ஆணையா் (தொழிலாளா்) ஆகிய தொகுதி-1 தோ்வுக்கு உள்பட்ட பணியிடங்களுக்கு விளம்பர அறிவிப்பு ஜூன் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோ்விற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற 18 முதல் 34 வயதுக்கு உள்பட்ட அனைவரும் தகுதியுடையவா்கள். மேலும், 2025-2026-ஆம் கல்வியாண்டில் இளங்கலை இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

இத்தோ்வானது முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு என மூன்று நிலைகளை கொண்டது. முதல்நிலைத் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (மே 20) காலை 11 மணிமுதல் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, பயிற்றுநா் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட அனுபவமிக்க பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும், வாராந்திர மாதிரித் தோ்வுகள், பாட வாரியான திருப்புதல் தோ்வுகள் உள்ளிட்ட மாதிரித் தோ்வுகளும், மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படவுள்ளன.

எனவே, டிஎன்பிஎஸ்சி தொகுதி-1 தோ்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2-வது தெரு, பாலாஜி நகா், பூம்புகாா் சாலை, மயிலாடுதுறை-1 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் நேரடியாக கலந்துகொள்வதோடு, 9499055904 என்ற வாட்ஸ் அப் எண்ணை தொடா்புகொண்டு பயனடையலாம்.