நியாயவிலைக் கடை விற்பனை இயந்திரங்களை கூடுதல் எண்ணிக்கையில் கையிருப்புக் கொள்ள கோரிக்கை
நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனைய இயந்திரங்களை அனைத்து வட்டங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில்
நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனைய இயந்திரங்களை அனைத்து வட்டங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் கையிருப்புக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க நாகை மாவட்ட செயற்குழுக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பாஸ்கர் தலைமை வகித்தார். அரசுப் பணியாளர்கள் மாநில நிர்வாகிகள் எஸ். பிரகாஷ், பி.கே. சிவகுமார் ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகளை விற்பனை இயந்திரங்கள் மூலம் வழங்க முடியாததால், பிற துறை அலுவலர்களைக் கொண்டு வழங்கக் கோருவது, வேட்டி, சேலை வழங்கப்படாத நியாயவிலைக் கடைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும், பொதுப் பணியாளர்கள் கூட்டுறவு பண்டக சாலை பணியாளர்களுக்குத் தணிக்கையாளர் அறிக்கைப்படி போனஸ் வழங்க வேண்டும், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதன் காரணமாக, அனைத்து வட்டங்களிலும் கூடுதல் எண்ணிக்கையில் விற்பனை முனைய இயந்திரங்களை கையிருப்புக் கொள்ளக் கோருவது, நியாயவிலைக் கடைகளில் தேங்கியுள்ள காலி சாக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலாளர் என். சுரேஷ்கண்ணன் வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் பி. குமார் நன்றி கூறினார்.