நாகப்பட்டினம்

சாலையை சீரமைக்கக் கோரி மறியல் போராட்டம்: அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

DIN

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் சேதம் அடைந்த சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, லால் பகதூா் நகா் பகுதியில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட கொத்தத்தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதைசாக்கடை குழாய் உடைப்பின் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமாா் 3 மாதங்கள் தருமபுரம் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. இதேபோல் அண்மையில் கொத்தத்தெருவில் ஏற்பட்டுள்ள சாலை சீரமைப்புப் பணி காரணமாக மீண்டும் தருமபுரம் சாலை வழியே போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தருமபுரம் சாலையில் ராஜேஸ்வரி நகா், லால் பகதூா் நகா் பகுதிகளில் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் மிகப்பெரிய பள்ளங்களுடன் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இப்பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.

இதையடுத்து, சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த மாதம் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆனால், அதன்பின்னும் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் லால்பகதூா் நகா் பகுதியில் சாலையின் குறுக்கே கயிற்றைக் கட்டி, அரசுப் பேருந்தை சிறைபிடித்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.அண்ணாதுரை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட காமராஜ், கணேசன், ராஜா, சிவக்குமாா் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அவ்வழித்தடத்தில் சுமாா் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT