அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 2-ஆவது நாளாக போராட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டத்தில் 7 இடங்களில் ஆசிரியர்- அரசு ஊழியர் கூட்டமைப்பினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். சமூக நீதிக்கு எதிரான அரசாணை எண்.56-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
400 பேர் கைது
நாகையில்... நாகை வட்டாட்சியர் அலுவலகம் அருகே கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.டி. அன்பழகன் தலைமையில் ஒன்றிணைந்த 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 250 பெண்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, செல்லூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கீழ்வேளூரில்... கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில் தலைமையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நாகை-திருவாரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்ளிட்ட 155 பேரை கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் ...
மயிலாடுதுறை, ஜன.23: மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, புதன்கிழமை 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் ஜி. செங்குட்டுவன் மற்றும் 75 பெண்கள் உள்ளிட்ட 145 பேர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால், அரசு அலுவலகங்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலகங்களும் ஊழியர்களின் வருகையின்மையால் வெறிச்சோடி காணப்பட்டன.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யம், ஜன.23: வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அந்துவான்சேரல் மற்றும் 90 பெண்கள் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 350 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர்.
சீர்காழியில்...
சீர்காழி, ஜன. 23: சீர்காழி கச்சேரி சாலையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் என். அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலர் ஸ்டாலின், மாவட்டத் தலைவர் நல்லமணி, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட அமைப்புச் செயலர் கோவி. நடராஜன், பொறுப்பாளர்கள் தங்க. சேகர், வெங்கடேசன், அகோரமூர்த்தி உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 476 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர்.
செம்பனார்கோவிலில்...
பொறையாறு, ஜன. 23: செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் வெங்கட், மதியழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் மாலை விடுவித்தனர்.
காவல்துறை அமைச்சுப் பணியாளர் வாயிற்கூட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்துக்கு அதரவு தெரிவிக்கும் வகையில், நாகை மாவட்ட காவல் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், வாயிற்கூட்டம் நடைபெற்றது. சங்க கிளைத்தலைவர் ஆர். பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கக் கிளைச் செயலாளர் ஆர். ராஜசேகர் உள்ளிட்ட 48 பேர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் நாகை ஒருங்கிணைப்பாளர் ஏ.டி. அன்பழகன் கூறுகையில், நாகை மாவட்டத்தில், 8500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் 2-ஆவது நாளான புதன்கிழமை, மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 3,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.