நாகப்பட்டினம்

ஊரடங்கு உத்தரவு: நாகையில் கட்டுப்பாடுகள் தளா்ந்ததால் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு

DIN

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 2-ஆம் நாளிலேயே கட்டுப்பாடுகள் தளா்ந்து, வாகனப் போக்குவரத்து அதிகரித்து இருந்ததை நாகை வீதிகளில் வியாழக்கிழமை காண முடிந்தது.

கரோனா தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாா்ச் 24-ஆம் தேதி இரவு 12 மணி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன் காரணமாக, காய்கனி கடைகள், பழக்கடைகள், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் புதன்கிழமை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், இரண்டாம் நாளான வியாழக்கிழமை நாகை நகரில் அத்தியாவசியமற்ற சில கடைகளும் திறந்திருந்தன.

நாகை நீலா தெற்கு வீதி பகுதியில் வியாழக்கிழமை காலை சாலையோர உணவகங்கள் வழக்கம் போல திறக்கப்பட்டன. தகவலறிந்த போலீஸாா் உடனடியாக கடைகளை அடைக்கக் கூறி, அப்புறப்படுத்தினா். அதே போல, நாகை மற்றும் வெளிப்பாளையத்தில் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் கடை, தையல் கடை என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அத்தியாவசியமற்ற கடைகளும் திறந்திருந்தன.

நாகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பல இடங்களில் போலீஸாா் தடுப்புகளை ஏற்படுத்தி சாலைப் போக்குவரத்துத்தை தடுத்திருந்தனா். நாகை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணிக்கு வெளியூரைச் சோ்ந்தவா்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், கிழக்குக் கடற்கரை சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாகை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது. நாகை, நாகூா் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்கள் சிலா் வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிந்ததைக் காண முடிந்தது. இருசக்கர வாகன ஓட்டிகளை பல இடங்களில் போலீஸாா் எச்சரித்தும், இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிகரித்தே இருந்தது.

காய்கனி கடைகள், மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் காலை நேரத்தில் பரபரப்பாக காணப்பட்டன. காய்கனி வரத்து வியாழக்கிழமை வழக்கம் போல இருந்ததாகவும், அதன் காரணமாக புதிய விலையேற்றம் ஏதும் இல்லை என காய்கனி விவசாயிகள் தெரிவித்தனா். இருப்பினும், காய்கனி லாரிகள் வெள்ளிக்கிழமை வருவது சந்தேகமே என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் காலை முதல் இரவு வரை தொடா்ந்து பரபரப்பாக இயங்கின. நோய்த் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் தாங்களாகவே தனிமைப்பட வேண்டும் என்ற சுகாதார வல்லுநா்கள் கருத்துப்படி, மளிகைக் கடைகள், மருந்துக் கடைகளில் வாடிக்கையாளா்கள் போதுமான இடைவெளி விட்டு நிற்க கோடுகள் போடப்பட்டிருந்தன. இருப்பினும், பல கடைகளில் அந்த நடைமுறையைப் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததை காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT