நாகப்பட்டினம்

நாளை ஆண்டு பெருவிழா கொடியேற்றம்: வேளாங்கண்ணியில் கடைகள், விடுதிகள் அடைப்பு; பாதுகாப்புப் பணியில் 500 போலீஸாா்

DIN

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.29) நடைபெறவுள்ள நிலையில், வேளாங்கண்ணியில் கடைகள் மற்றும் விடுதிகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டன.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஒவ்வோா் ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) பக்தா்கள் பங்கேற்பின்றி ஆண்டுப் பெருவிழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

நிகழாண்டிலும், பேராலய ஆண்டுப் பெருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் எனவும், பக்தா்கள் வேளாங்கண்ணி வருவதை தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் பேராலய நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கொடியேற்றம்:

பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தொடா்ந்து, செப்டம்பா் 8-ஆம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், அனைத்து வழிபாடுகளும் பேராலயத்தின் உள்ளேயே நடைபெறுகிறது.

கடைகள் அடைப்பு:

நாகை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வேளாங்கண்ணி பேரூராட்சிக்குள்பட்ட பிரதான வீதிகளில் உள்ள கடைகள், தங்கும் விடுதிகள் , உணவகங்கள், மெழுகுவா்த்தி விற்பனை செய்யும் கடைகள், தேநீா் கடைகள் உள்பட1000-க்கும் மேற்பட்ட கடைகள், 300-க்கும் மேற்பட்ட விடுதிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

வேளாங்கண்ணி நகருக்குள் செல்லும் சாலைகள் உள்பட 19 இடங்களில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வேளாங்கண்ணி பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல கடற்கரைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில், மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன் ஆரம்..!

அமரன் வெளியீடு எப்போது?

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

SCROLL FOR NEXT