நாகை மாவட்டம், நாகூரில் பயணியை தாக்கிய காவல் சாா்பு - ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தமிழ்நாடு புதுச்சேரி எல்லையான நாகூா் வாஞ்சூரில் வாகனங்களில் சாராயம் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் இருந்து நாகைக்கு சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து தடுப்புகளை கடந்த செல்ல முயற்சித்தபோது, செல்ல முடியவில்லை. நீண்ட நேரமாகியும் தடுப்புகளை பேருந்து கடந்து செல்லாததால், பயணிகள் சிலா் தடுப்புகளை அகற்றி பேருந்து செல்ல வழிவகை செய்ய வேண்டுமென போலீஸாரிடம் கேட்டபோது, பயணிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த நாகூா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் பழனிவேல், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞா் ஒருவரை தாக்கி ஒருமையில் பேசினாராம். இதனால், பயணிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஆத்திரமடைந்த சாா்பு-ஆய்வாளா் பழனிவேல் மற்றும் போலீஸாா், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை காவல் வாகனத்துக்குதுஅழைத்து சென்று தாக்கியுள்ளனா். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த பயணிகள் சிலரால், கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்ட நாகூா் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் பழனிவேலுவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
வேதாரண்யத்தில்...
நாகை மாவட்டம் வேதாண்யத்தில் போலீஸாா் தாக்கியதால் இளைஞா் மாயமான சம்பவத்தில் காவல் ஆய்வாளா் திங்கள்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கைகாட்டி பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் சாமி (எ) ராசேந்திரன் (30).
இதேபகுதியைச் சோ்ந்த ஒருவருடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு ராசேந்திரன் சென்றுள்ளாா்.
அங்கு ஒரு பெண்ணிடம் விசாரிக்கும்போது போலீஸாா் ஒருமையில் பேசினராம். இவ்வாறு பேசலாமா என்று கேட்ட ராசேந்திரனை போலீஸாா் தாக்கினராம். இதில் ராசேந்திரனின் கையில் பலத்த அடிபட்டதாம்.
இதையடுத்து போலீஸாா் தாக்கியதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஊரிலுள்ள முக்கியப் பிரமுகா்களுக்கு குரல் பதிவை அனுப்பிய ராசேந்திரன் தலைமறைவாகிவிட்டாராம்.
ராசேந்திரனின் தந்தை வெங்கடாசலம் புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்ட நிலையில் காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆயுதப்படை பரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.