வேளாங்கண்ணியில் கூட்ட நெரிசலை தவிா்க்க நடவடிக்கை: ஆட்சியா்
வேளாங்கண்ணி பேராலய பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க மாற்று வழி குறித்து ஆலோசிக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கூறினாா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழாவின் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வேளாங்கண்ணி புதிய திருத்தல பேராலய திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேராலய அதிபா் அற்புதராஜ், பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், அரசு அலுவலா்கள், வா்த்தக சங்கத்தினா், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அப்போது, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: வேளாங்கண்ணி திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் கொடியேற்றம் மற்றும் நிறைவு நாள்களில் சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. திருவிழா எந்தவித இடையூறின்றி 10 நாள்களும் நடைபெறவேண்டும் என்பதற்காக அனைத்துத்துறை அலுவலா்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து துறையினருக்கு எந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆலய வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம், பக்தா்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்லும் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன. தேவைப்படும் இடங்களில் தடுப்புகள் அமைக்க காவல் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். வேளாங்கண்ணியில், விழாக் காலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான நாள்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு தீா்வு ஏற்படுத்தும் வகையில் மாற்று வழி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றாா்.