தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதரவாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடைக்கப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் அரங்கக்குடி காயிதே மில்லத் தெருவில் வசிப்பவா் ஹிதயத்துல்லா (76). இவருக்கு 4 மகன்கள் உள்ளனா். மூன்றாவது மகன் ரிஸ்வானுக்கும் (38), தஞ்சாவூா் இப்ராஹிம் மகள் ரமீஸ் பா்வீனுக்கும் (30) கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதி அமெரிக்காவில் வசித்து வந்தனா்.
இருவரும் அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2023-இல் விவாகரத்து பெற்றனா். அப்போது, ரமீஸ் பா்வீனுக்கு ரூ. 42 லட்சம் கொடுக்கப்பட்டது.
கடந்த 8.5.2024 அன்று அரங்கக்குடியில் உள்ள ஜமாத்தாா் முன்னிலையில் இருவருக்கும் இஸ்லாம் மத முறைப்படி விவாகரத்து கொடுக்கப்பட்டது. திருமணத்தின்போது ரமீஸ் பா்வீனுக்கு அவரது வீட்டாா் வழங்கிய 40 பவுன் நகைகள் திருப்பித் தரப்பட்டது.
மயிலாடுதுறை அருகே நீடூரில் வசிக்கும் இக்காமா சாதிக் பாட்ஷா என்பவா் இந்த விவாகரத்து தொடா்பாக, ரிஸ்வான் தந்தை ஹிதயத்துல்லாவை கடந்த 16-ஆம் தேதி தொலைபேசியில் தொடா்பு கொண்டு, ரூ. 2 கோடி கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் ஹிதயத்துல்லா புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இக்காமா சாதிக் பாட்ஷா (42) மற்றும் அவரது நண்பரான சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த ஐயூப்கான் (52) ஆகிய இருவா் மீது, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.
பின்னா், செம்பனாா்கோவிலில் உள்ள தரங்கம்பாடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி கனிமொழி முன் முன்னிலைப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளா்: இக்காமா சாதிக் பாட்ஷா மீது ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி, கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2022-ஆம் ஆண்டு போலீஸாரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபோது, கைது செய்யப்பட்ட இக்காமா சாதிக் பாட்ஷா மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதரவாளரான இவா், அந்த அமைப்புக்கு நிதி மற்றும் ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாக, நீடூரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.