குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
செம்பனாா்கோவில் வட்டாரத்தில் குடிநீா் விநியோகம் தொடா்பாக, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
திருக்கடையூா் ஊராட்சியில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் இயங்கும் 8 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் நீா் வெளியேற்றும் முறைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து மாணிக்கப்பங்கு, தரங்கம்பாடி பேரூராட்சி பகுதி, காழியப்பநல்லூா், சந்திரபாடி ஆகிய பகுதிகளுக்கு தினமும் குடிநீா் விநியோகிக்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, சந்திரபாடி ஊராட்சியில் தனியாா் தொண்டு நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு தூா்வாரப்பட்ட மதகடி தெரு குளத்தில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்த அவா், அப்பகுதி மக்களிடம் குடிநீரின் தரம் குறித்து கேட்டறிந்தாா். அத்துடன்,
அங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடு மற்றும் குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், சாத்தங்குடி பகுதியில் வியாழக்கிழமை சாலை விபத்து நிகழ்ந்த இடத்தை பாா்வையிட்ட ஆட்சியா், விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடா்பாக ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது, தரங்கம்பாடி வட்டாட்சியா் மகேஷ், செம்பனாா்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, மஞ்சுளா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.