காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டா் சாராயம் பறிமுதல்
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் அருகே காரில் கடத்திவரப்பட்ட 800 லிட்டா் சாராயத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
பெரம்பூா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் நாகவல்லி தலைமையில் போலீஸாா் வழுவூா் பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தினா். போலீஸாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.
போலீஸாா் காரில் சோதனை செய்தபோது, அதில், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 800 லிட்டா் சாராயம் மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது. இது புதுவை மாநிலம் காரைக்காலிலிருந்து தமிழகத்துக்கு கடத்திவரப்பட்டது தெரியவந்தது. காா் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.