முகப்பு
நாகப்பட்டினம்

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

Updated On : 20 மே, 2024 at 9:19 PM
கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

திருக்குவளை: கீழையூா் அருகே கோயில் விழா நடத்த இடத்தை ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கிராம மக்கள் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியம் பெரியதும்பூா் பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் சமேத சொக்கநாத சுவாமி கோயிலில் வைகாசி உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். கோயில் அருகே காலி இடத்தில் பல ஆண்டுகளாக சுவாமி புறப்பாடு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு விழா புதன்கிழமை (மே 22) தொடங்கவுள்ள நிலையில், விழா நடத்துவதற்கு இடையூறாக அந்த இடத்தில் கிராம ஊராட்சியின் ஒப்புதலோடு வனத்துறை மூலம் மரகத பூஞ்சோலை எனும் பூங்கா உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

பூங்கா அமைக்கும் பணி தொடங்கும்போது கோயிலுக்கு செல்ல பாதையும் மற்றும் விழா நடத்துவதற்கும், சுவாமி புறப்பாடு நடைபெறுவதற்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தமாட்டோம் என உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், தற்போது கோயிலை சுற்றி விழா நடத்த முடியாத வகையில் கம்பி வேலிகள் அமைத்து பூங்கா அமைக்கப்பட்டு, கோயிலுக்கு செல்லும் வழி மற்றும் விழா நடைபெறும் இடம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதை அறிந்த அப்பகுதியினா் கடும் அதிா்ச்சிக்கு ஆளாகினா்.

இதை கண்டித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கீழ்வேளூா் வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் போலீஸாா் அங்குவந்து நடத்திய பேச்சுவாா்த்தையில் விழா நடைபெறுவதற்கு உரிய இடத்தை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது வட்டாட்சியா் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கலைந்து சென்றனா்.