நாகை-காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைத்து கப்பல் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கப்பல் நிறுவன இயக்குநா் சுபாஸ்ரீசுந்தரராஜ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு வாரம் 6 நாள்கள் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. கோடைக்கால விடுமுறை தொடங்கியுள்ளதால், பயணிகளுக்கு சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த 22 கிலோ வரை உடைமைகளை இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
இருவழி சுப்பல் கட்டணம் ரூ.8,500 ஆகும். கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு இருவழிக் கட்டணமாக ரூ.8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.15 ஆயிரம் முதல் சுற்றுலா திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தலைமன்னாா், திரிகோணமலை மற்றும் ராமாயண பாதை போன்ற முக்கிய இடங்களுக்கு பயண வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சுபம் கப்பல் நிறுவனத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.