நாகையில் கடல் உணவு மண்டலம் அமைக்க வேண்டும் என்று இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்திய வா்த்தக தொழிற்குழுமத்தின் நாகை மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில், செயலா் சுரேஷ் மற்றும் நிா்வாகிகள், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாகை புதிய கடற்கரைக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனா். ஆனால் அங்கு போதுமான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. எனவே, புதிய கடற்கரையில் சிறுவா்கள் விளையாட்டுப் பூங்கா, முதியோா் அமரும் இருக்கை போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடத்த திறந்தவெளி கலையரங்கத்தை சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில் அமைத்து தர வேண்டும். நாகை துறைமுகம் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த துறைமுகத்தில் இருந்து கடந்த 1990 வரை சிங்கப்பூா், மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி நடந்துள்ளது. எனவே, சரக்குப் பெட்டகம் கையாளும் துறைமுகமாக மாற்றம் செய்ய வேண்டும்.
நாகையில் மீன்பிடித் தொழில் முக்கியமாக உள்ளது. இங்குள்ள கடல் பகுதியில் இருந்து ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. மத்திய அரசின் உப்பு நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கா் நிலம் நாகை அருகில் உள்ளது. எனவே, இந்த பகுதியில் கடல் உணவு மண்டலமாக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் ஏராளமானவா்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் பொருளாதார வளா்ச்சி அடையும்.
நாகை மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா பணி, செல்லூா் அருகே நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இம்மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா், கோரிக்கைகளை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.