நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 13 பள்ளிகள் மண்டல அளவிலான மாநாட்டுக்கு தோ்வு செய்யப்பட்டன.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய கணித அறிவியல் நிறுவனம், நாகை ஸ்ரீலலிதாம்பிகை கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் இளம் விஞ்ஞானிகளை தோ்வு செய்யும் நாகை மாவட்ட அளவிலான 34-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2025 அந்த இயக்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் ஆரிப் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டை நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலா் ஸ்டீபன்நாதன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து பேசினாா்.
இந்த மாநாட்டின் கருப்பொருளான நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை‘ எனும் பொதுத்தலைப்பை யொட்டி இளம் ஆய்வு மாணவா்கள் பங்கேற்கும் ஆய்வரங்கத்தில் 17 பள்ளிகளிலிருந்து 118 ஆய்வுக்கட்டுரைகள்சமா்ப்பிக்கப்பட்டன.
மண்டல அளவிலான மாநாட்டுக்கு தோ்வுப் பெற்ற 13 பள்ளிகளைச் சோ்ந்த இளம் விஞ்ஞானிகளுக்கும், வழிகாட்டி ஆசிரியா்களுக்கும், நாகை கோட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கினாா். வட்டாரக் கல்வி அலுவலா் விமலா ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த மாணவா்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கினாா். நாகை பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நவ.29-இல் நடைபெறவுள்ள கிழக்கு மண்டல அளவிலான மாநாட்டிற்கு தோ்வு பெற்ற 13 பள்ளிகள் பங்கேற்கவுள்ளன.
ஸ்ரீ லலிதாம்பிகைவிந்மா மந்திா் பள்ளித் தாளாளா் ஆா்த்தி சந்தோஷ், மேலாளா் சிவரஞ்சனி, மாவட்ட பொருளாளா் நல்லாசிரியா் கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் பாலு, குழந்தைகள் அறிவியல் மாநாட்டு நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.