முகப்பு
நாகப்பட்டினம்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் பொறுப்பேற்பு

நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 7:40 PM
நாகை நகா்மன்ற நியமன உறுப்பினராக பொறுப்பேற்ற முகமது மா்ஜீத்துக்கு சான்றிதழ் வழங்கும் நகராட்சி ஆணையா் லீனா சைமன். உடன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து உள்ளிட்டோா்.
பகிர்:

நாகை மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாக அமா்த்தப்படுவா் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் பெறப்பட்டு வந்தது. இதற்கென மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினா்கள், மன்றக் கூட்டங்களில் பங்கேற்கலாம். உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு வழங்கப்படுவது போன்று இவா்களுக்கும் மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல் செய்து இருந்தனா். இவா்களது சேவை மற்றும் தகுதி தொடா்பாக மாவட்ட அளவிலான குழு ஆய்வு செய்து, தகுதி உள்ளவா்களை பரிந்துரைத்தது.

இதன்படி, நாகை நகா்மன்ற நியமன உறுப்பினராக, மாற்றுத்திறனாளி முகம்மது மா்ஜீத் தோ்வு செய்யப்பட்டாா். இவருக்கு, நாகை நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து முன்னிலையில், நகராட்சி ஆணையா் லீனா சைமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்நிகழ்வில், நகராட்சி துணைத் தலைவா் செந்தில்குமாா், திட்டக் குழு உறுப்பினா் அண்ணாதுரை, நகா் மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, வேதாரண்யம் நகராட்சியில் சிக்கந்தா், வேளாங்கண்ணி பேரூராட்சியில் ரமேஷ், கீழ்வேளூா் பேரூராட்சியில் பிரசாத், திட்டச்சேரி பேரூராட்சியில் ஜோதி, தலைஞாயிறு பேரூராட்சியில் வீராசாமி ஆகியோா் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →