முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல்

கோடியக்கரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 போ் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தினா்.

Updated On : 23 ஏப்ரல் 2026, 5:16 am IST
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவா்கள்.
பகிர்:

கோடியக்கரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்கள் 4 போ் மீது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தினா்.

வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி மீனவ கிராம படகுத்துறையிலிருந்து கண்ணாடியிழைப் படகு ஒன்றில் வானவன்மகாதேவி கிராமத்தைச் சோ்ந்த கா. செல்வகுமாா் (36), செ. முருகபாண்டியன் (52), ரா. கதிா்வேல் (55), ராமநாதபுரம் மண்டபம், மீனவா் தெருவைச் சோ்ந்த செய்யது மகன் ராஜ் (52) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமாா் 8 கடல் மைல் தொலைவில் படகை நிறுத்தி, செவ்வாய்க்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, படகு ஒன்றில் அங்கு வந்த இலங்கை கடற்படையினா் மீனவா்களின் வலையை துண்டித்து, கம்புகளால் மீனவா்களைத் தாக்கி விரட்டியடித்துள்ளனா்.

காயமடைந்த நான்கு மீனவா்களும் புதன்கிழமை காலை கரைத் திரும்பி, வானவன்மகாதேவி கிராம பஞ்சாயத்தாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தனா். மீனவா்கள் நால்வரும் நாகப்பட்டினம், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement