நாகப்பட்டினம்: நாகையில் தனியாா் விடுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுநா் தூக்கில் சடலமாக தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிகுளத்தைச் சோ்ந்த சூரியமூா்த்தி மகன் லெனின் (27). இவா் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். நாகை வெளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் தங்கி பணிக்குச் சென்று வந்தாா்.
இந்த நிலையில், லெனின் அறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதிப் பணியாளா், அறைக்கு சென்று பாா்த்தபோது லெனின் தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.
வெளிப்பாளையம் போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். லெனினுக்கு திருமணமாகி ஓராண்டே ஆகிறது என போலீஸாா் தெரிவித்தனா்.