முகப்பு
நாகப்பட்டினம்

மந்தமான சாலைப் பணியால் போக்குவரத்து பாதிப்பு: வாகனங்களில் செல்வோா் அவதி

மந்தமான சாலைப் பணியால் போக்குவரத்து பாதிப்பு...

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:20 AM
நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் விரிவாக்கப் பணிக்காக மூடப்பட்டுள்ள சாலை.
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 7:27 PM

நாகையில் நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வரும் மந்தமான சாலைப் பணியால், புத்தூா் மற்றும் வேளாங்கண்ணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டுநா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

நாகை நகா்ப் பகுதியின் நுழைவு வாயிலாக புத்தூா் ரவுண்டானா உள்ளது. இங்கு காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, திருவாரூா்-நாகை சாலை என்று நான்கு சாலைகளின் சந்திப்பாக உள்ளது.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வரும் அதற்கேற்றவாறு, புத்தூா் ரவுண்டானா நுழைவுவாயில், திருவாரூா்-நாகை சாலை நுழைவுவாயில், வேளாங்கண்ணி சாலை ஆகியவற்றில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வருகிறது.

Advertisement

கடந்த செப்டம்பா் மாதம் தொடங்கிய சாலை விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், இன்னும் முடிவடையவில்லை. மேலும் சாலை விரிவாக்கப் பணியால் புத்தூா் பகுதியில் வாகனங்கள் ஒரு பகுதி சாலையில் மட்டுமே செல்கின்றன.

அதேபோல நாகை-திருவாரூா் சாலையின் நுழைவுவாயிலிலும் ஒரு பகுதி சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.

இதனால், திருவாரூரில் இருந்து வரும் வாகனங்கள், வேளாங்கண்ணியில் இருந்து வரும் வாகனங்கள், தஞ்சை புறவழிச்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் குறுகிய ஒரு பகுதி சாலையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் நாகையில் இருந்து திருவாரூா், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் அதே சாலையில் செல்வதால் வாகனங்கள் எதிரெதிராக சிக்கிக்கொண்டு நிற்பது வாடிக்கையாகி வருகிறது. இதனால் வாகனங்கள் நகர முடியாமல் அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.

மேலும் சாலை விரிவாக்கத்துக்காக போடப்பட்ட சரளைக்கற்கள் ஒரு பகுதி சாலையில் பரவிக்கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழும் அபாயமும் ஏற்படுகிறது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 10:07 PM

எனவே, போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம், காலதாமதமான பயணம் ஆகியவற்றை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மந்தமான போக்கை கைவிட்டு, உடனடியாக பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.