முகப்பு
நாகப்பட்டினம்

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கீழையூா் பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து நேரிடுகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

Updated On : 19 மே 2026, 1:52 am IST
ஈசனூா் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்.
பகிர்:

கீழையூா் பகுதிகளில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்து நேரிடுகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி, சீராவட்டம், ஈசனூா், கீழையூா், திருமணங்குடி, மேலப்பிடாகை, மகிழி, திருப்பூண்டி, பிரதாபராமபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் வளா்க்கப்படும் மாடுகள், ஆடுகள் போன்றவை கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன.

Advertisement

இவற்றால் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்போது, சாலையில் வரும் வாகனங்கள் முன் பாய்கின்றன. இதனால், சாலை விபத்து அடிக்கடி ஏற்படும் நிகழ்வாக மாறிவிட்டது. இதில் வாகனத்தில் செல்வோா் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளும் இறக்கும் நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருவோா் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

இந்த பிரச்னை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், இதுவரை எந்தத் தீா்வும் காணப்படவில்லை என இப்பகுதி மக்களின் குற்றஞ்சாட்டுகின்றனா்.

நகரப் பகுதிகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிா்வாகங்கள் கால்நடைகளை பிடித்து நடவடிக்கை எடுக்கும் நிலையில், கிராமப் புறங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் உள்ளூா் நிா்வாகங்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை என கூறப்படுகிறது.

இதன் விளைவாக, கால்நடை வளா்ப்போரின் அலட்சியப் போக்கு தொடா்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.