ஊதிய உயர்வு கிடைக்குமா? எதிர்பார்ப்பில் மின்வாரிய ஊழியர்கள்
கடந்த 25 மாதங்களாக ஊதிய உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், நிகழாண்டாவது பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு நல்ல
கடந்த 25 மாதங்களாக ஊதிய உயர்வு பிரச்னைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், நிகழாண்டாவது பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு நல்ல முடிவை அரசு அறிவிக்குமா? என தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 70 ஆயிரம் ஊழியர்கள், அலுவலர்கள் பணியாற்றி வருகிறனர்.
அங்கீகரிக்கப்பட்ட 11 தொழிலாளர் சங்கங்களும், 4 பொறியாளர்கள் சங்கமும், அங்கீகாரம் பெறாத 6 தொழிலாளர்கள் சங்கமும் என மொத்தம் 21 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட வேண்டும் என்பது, மின்வாரியம், தொழிலாளர் வாரியம், தொழிற்சங்கம் ஆகியவற்றின் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் ஒப்பந்தம் ஆகும். ஆனால், இவர்களுக்கு கடந்த 1.12.2015 முதல் 25 மாதங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. கடைசியாக இவர்களுக்கு கடந்த 1.12.2011 -ஆம் ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு குறித்து மின்வாரிய தலைமை பொறியாளர் தலைமையிலான மின்வாரிய பேச்சுவார்த்தைக் குழுவுடன், மின்வாரிய தொழிற்சங்கங்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி மின் வாரிய ஊழியர் மற்றும் அலுவலர்களுக்கு அரசு துறைக்கு இணையாக 2.57 சதவீதத்தில் ஊதிய உயர்வு அளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், நிதித்துறை மேற்படி 2.57 சதவீதம் கொடுப்பது குறித்து அறிவிப்பு செய்யாது தாமதப்படுத்தி வருவதால், ஊதிய உயர்வு பிரச்னை கடந்த 25 மாதங்களாக இழுபறியில் இருந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய இழப்பில் இருந்த மின்சார வாரியம், அண்மைக்காலமாக மின்வாரிய தலைமை எடுத்த தொடர் நடவடிக்கையால், தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டைவிட, 2017 -ஆம் ஆண்டு 25 சதவீதம் இழப்பை (ரூ. 4,386 கோடி) குறைத்துள்ளது.
மரபுசாரா எரி திறனை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் மின்வாரிய நட்டம் வெகுவாக குறைந்து, லாபம் உயர்ந்துள்ளது. அனல் மின்நிலையங்களும் சீரிய முறையில் மின் உற்பத்தி செய்ததால் ரூ. 707.24 கோடி அதிக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
மின் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையுடன் மத்திய மின் ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதலை மீறாததாலும் லாபம் கூடியுள்ளது. மேலும், மின் உற்பத்தியை பெருக்கியது; மின் இழப்பை குறைத்தது; நவீன மின் மீட்டர்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் மின் வாரியம் நிதி நிலையில் தற்போது சிறப்பாக உள்ளது.
இதுபோன்ற செயல்பாடுகளை அடுத்து, மின் வாரிய ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு அளித்திட வேண்டும் என மின் வாரிய தலைமையின் கருத்தாக உள்ளது. மேலும், ஒவ்வொரு முறை ஊதிய உயர்வின்போதும் மின்வாரிய ஊழியர்களுக்கு வேலை பளுவும் உயர்த்தப்படுவதால் சிறப்பான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2017 -ஆம் ஆண்டு இறுதியில் அனைத்து மின் வாரிய தொழிற் சங்கங்களும், மின் வாரிய தலைவரை சந்தித்து உடனடியாக ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தினர். 2018 ஜனவரியில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அப்போது உறுதி அளிக்கப்பட்டது.
கடந்த 2016 -ஆம் ஆண்டு வீசிய வர்தா புயல், அதையடுத்து 2017 -ஆம் ஆண்டு தாக்கிய ஒக்கி புயல்களின்போது, மின் வாரிய ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, விரைந்து மின் விநியோகத்தை சரி செய்தனர். இயற்கை இடர்பாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினரை விட்டுச் சென்று, அங்கேயே பலமாதங்கள் தங்கி போர்க்கால அடிப்படையில் பணியாற்றும் மின் ஊழியர்கள், தங்களின் ஊதிய உயர்வு தாமதப்படுவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மத்திய அரசு 7 -ஆவது ஊதிய உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, மாநில அரசுகளும் ஆசிரியர், அரசுத்துறை அலுவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இதை பின்பற்றி மின்வாரியத்துக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரசேதம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊதிய உயர்வை மின்வாரிய ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. என்ன காரணத்தினாலோ தமிழக அரசு தாமதித்து வருகிறது.
கடந்த வாரம் அனைத்து தொழிற்சங்கங்களும் மின்வாரிய தலைவரைச் சந்தித்து, உடனடியாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திட வேண்டும்
என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். இந்நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.23) நடைபெறுவதாக இருந்த மின்சார வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசும், மின்வாரியமும் இணைந்து மின்வாரிய ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.