திருவாரூர் மாவட்டத்தில் 5,976 ஹலோ போலீஸ் இலவச அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் மற்றும் காவல் துறையின் இலவச எண் 100 க்கு தொடர்பு கொண்டது என மொத்தம் 5,976 அழைப்புகளுக்கு
திருவாரூர் மாவட்டத்தில் ஹலோ போலீஸ் மற்றும் காவல் துறையின் இலவச எண் 100 க்கு தொடர்பு கொண்டது என மொத்தம் 5,976 அழைப்புகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொது இடம் மற்றும் பொதுமக்களிடம் பிரச்னை, பெண்களிடம் கேலி, கிண்டல் செய்தல், போக்கிரித்தனம், போக்குவரத்து இடையூறு, சாலை விபத்து போன்ற நிகழ்வுகளின்போது, பொதுமக்கள் மாவட்ட காவல்துறையை உதவிக்கு அழைக்க ஹலோ போலீஸ் 8300087700 என்ற 24 மணி நேர சேவை தொடங்கப்பட்டது.
இந்த எண்ணில் வாட்ஸ் ஆப் வசதியும் கொடுக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த சேவை தொடங்கியதிலிருந்து தற்போது வரை, சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2,813 அழைப்புகளும், குற்றம் தொடர்பாக 147 அழைப்புகளும், மணல் கடத்தல் தொடர்பாக 542 அழைப்புகளும், போக்குவரத்து இடையூறு, விபத்து தொடர்பாக 220 அழைப்புகளும், சட்டவிரோத மதுபுட்டிகள் விற்பனை தொடர்பாக 1,061 அழைப்புகளும், சூதாட்டம், லாட்டரி தொடர்பாக 92 அழைப்புகளும் தவிர பிற பிரச்னைகளுக்காக 213 அழைப்புகள் என மொத்தம் 5442 அழைப்புகள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக காவல்துறை இலவச எண் 100 ஐ தொடர்பு கொள்ளும் வகையில் ஒவ்வோர் மாவட்டத்திலும் நவீன காவல் கட்டுப்பாட்டு
அறை அமைக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் அழைப்பதுபோல பொதுமக்கள் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொண்டால் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட காவல் துறையில் இயங்கும் நவீன கட்டுப்பாட்டு அறை மூலம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு காவலர்கள் அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த வசதி திருவாரூர் மாவட்டத்தில் 2018 ஜன.18 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. இதுவரை இலவச எண் 100 சேவையில் 534 அழைப்புகள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்களது அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண் 8300087700 மற்றும் அவசர போலீஸ் 100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.