தேசிய அளவில் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும்: நபார்டு வங்கி தலைமைப் பொது மேலாளர்
தேசிய அளவில் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் சென்னை நபார்டு வங்கி தலைமைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதன்.
தேசிய அளவில் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றார் சென்னை நபார்டு வங்கி தலைமைப் பொதுமேலாளர் பத்மா ரகுநாதன்.
திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை, கிரியேட் நமது நெல்லைக் காப்போம் மற்றும் சங்கம் 4 சென்னை சார்பில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது: தமிழகத்தில் வேளாண்மை மேம்பாட்டுக்காக நபார்டு வங்கி தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. அதில், நீர்நிலைகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு ரூ. 3,000 கோடி நீர் நிலைகள் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 41,000 ஏரிகள்தூர் வாரப்பட்டு நீர் சேமிக்கப்பட்டதன் மூலம் கடும் வறட்சியையும் மீறி 120 சதவீதம் நெல் மகசூல் பெறப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வேளாண் தொழிலில் ரசாயன பயன்பாட்டை குறைக்க முயற்சிக்க வேண்டும். அரிய பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து தேசிய அளவில் இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் நமது நெல்லைக்காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல். ஜெயராமன் வரவேற்று பேசியது: 1962-ஆம் வாக்கில் மத்திய அரசு கொண்டு வந்த பசுமைப் புரட்சித் திட்டம் மூலமாக உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என மார்தட்டிக் கொண்ட அதேவேளையில் உலகநுகர்வோர்களின் சந்தையாக உள்ள இந்தியாவைக் குறி வைத்து வெளிநாட்டு சக்திகள் நாம் கொண்டு வந்த நவீன விவசாயத்தின் மூலமாக தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளிடம் ஊடுருவவிட்டு பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் களமாக மாற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆங்கில மருந்துகளை வாங்க ஒரு தொகையை செலவிடும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். காலை உணவாக பாரம்பரியமிக்க நீராகாரத்தை துறந்து மருந்துக் கடை வாசலில் காலையிலே தவம் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இனியாவது இயற்கை வேளாண்மை விஞ்ஞானி கோ. நம்மாழ்வாரின் கொள்கைப்படி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு உடல் நலத்தைப் பாதுகாப்போம்.
இதுவரை நடைபெற்ற நெல் திருவிழாக்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழாண்டு 6,000 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படவுள்ளன. விதை நெல்லைப் பெறும் விவசாயிகள் அடுத்த ஆண்டில் 4 கிலோ நெல் விதைகளாக திருப்பித் தரவேண்டும். பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்தைக் காக்க இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவை நனவாக்கும் வகையில் நெல் திருவிழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார் நெல். ஜெயராமன்.
விழாவில், நபார்டு வங்கியின் திட்டங்கள், விளைநிலங்கள், நீராதாரங்கள் பாதுகாப்பு, ஒரு ஏக்கர் நிலத்தில் கால் கிலோ விதை தொழில்நுட்பம், விற்பனை சந்தை வாய்ப்புகள், பருவநிலை மாற்றமும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக் கூடிய பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அதற்கேற்றவாறு மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். இதற்கு வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும். அதேபோல், விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். அரசு அலுவலர்கள் வேளாண்மை விளைபொருள்களுக்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய கால சூழல் மாற வேண்டும் என்றார்.
கருத்தரங்க வளாகத்தில் கிச்சலிசம்பா, கைவரசம்பா, சிங்கினிகார், மடுமுழுங்கி, இழுப்பப்பூ சம்பா, மாப்பிள்ளை சம்பா, குழியடிச்சான், கொட்டார சம்பா, தூயமல்லி, காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய நெல், அரிசி வகைகள் வேளாண் கருவிகள், மூலிகை மற்றும் பழமரக்கன்றுகள் அடங்கிய கண்காட்சியை நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி தொடங்கி வைத்தார். நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் பி. துரைசிங்கம், ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி, தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் அ. அம்பலவாணன் மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பங்கேற்ற விவசாயிகளுக்கு மூலிகை தேநீர், மதியம் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மன்னார்குடி சாலையிலிருந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் திருவுருவப் படத்துடன் தமிழ்நாடு வர்த்தகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில், திருவாரூர் வேலுடையார் கல்விக் குழுமங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய நெல் திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 22) நிறைவு பெறுகிறது.