சிலிண்டர் விலை உயர்வு! முதுகில் குத்தும் பாஜக: டி.கே. சிவக்குமார்
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியது குறித்து...
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தவிருப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு குறித்து செய்தியாளர்களுடன் டி.கே. சிவக்குமார் பேசியதாவது, "இந்த சிலிண்டர் விலை உயர்வு, சாமானிய மக்களையும் உணவகங்களையும் பாதிக்கும். அவர்கள் (பாஜக) நாட்டின் வாக்காளர்களை ஏமாற்றியுள்ளனர்.
தேர்தலுக்குப் பிறகு இவ்வாறு செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். இதைக் கண்டித்து, விலை உயர்வைத் திரும்பப் பெறுவதற்காக நாங்கள் போராட்டம் நடத்துவோம்" என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட உயர்வைத் தொடர்ந்து, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை (மே.1) ரூ. 993 உயர்ந்து ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது.
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலையும் ரூ. 261 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஏப்ரல் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த நிலையில், தேர்தல் முடிவடைந்த பிறகு சிலிண்டர் விலையோ பெட்ரோல், டீசல் விலையோ உயர்த்தப்படும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
இந்த நிலையில்தான், வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையில் எந்த உயர்வும் இல்லை.