ஈரப்பதத்தை அதிகரித்து, தடையின்றி நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை
ஈரப்பதத்தை அதிகரித்து தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரப்பதத்தை அதிகரித்து தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில துணைச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டில் குறுவை நெல் பயிரிட தொகுப்புத் திட்டம் மூலம் மானியம் வழங்கி, விவசாயிகளைப் பாதுகாத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துவருகிறது. ஆனால், அறுவடையான குறுவை நெல்லை கொள்முதல் செய்யாமல் இருப்பது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கரீப் சாகுபடி பருவம் முடிந்த நிலையில், மத்திய அரசு அனுமதி வழங்கினால்தான் ரபி பருவத்தில் கொள்முதல் செய்ய முடியும் என அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த செப்டம்பர் இறுதியில் மூடப்பட்டன. இதனால், பல விவசாயிகள் மிகக்குறைந்த விலைக்கு தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
ஆனால், குறுவை அறுவடை பெரிய அளவில் நடக்கும் பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அக்டோபர் முதல் மத்திய அரசு அறிவித்த கூடுதல் விலை ரூ. 200 கிடைக்கும் என்பதால், தாமதப்படுத்தி பின்னர் அரசு கொள்முதல் நிலையங்களில் விற்கலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
தற்போது புதிய விலை நடைமுறைக்கு வந்தாலும் பல இடங்களில் நெல்லை கொள்முதல் செய்யவில்லை. நெல் ஈரமாக உள்ளது என மறுக்கப்படுகிறது. அறுவடையான குறுவை நெல்லை சில நாள்கள் கழித்து விற்கலாம் என்ற அறிவுரை வழங்கிய அரசு அலுவலர்கள், தற்போது ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுப்பது கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் வரைமுறையான 17 சதவீத ஈரப்பதம் இருந்தால்தான் கொள்முதல் செய்யப்படும் என்பது தற்போதைய பருவ நிலையில் சாத்தியப்படாத ஒன்று.
ஈரப்பதம் குறித்து மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதி, அவர்கள் வந்து பார்வையிட்டு, பின்னர் அறிக்கை தந்து, அதன்பிறகு ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய முற்படுவதற்குள், விற்கவேண்டிய நெல்லை மிகக்குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படும். ஏனெனில், சம்பா சாகுபடி செலவுக்கு பணம் தேவைப்படும் நிலையில் விவசாயிகள் உள்ளனர் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, தமிழக அரசு ஈரப்பதத்தை அதிகரித்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.