முகப்பு
திருவாரூர்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: அக்.12-இல் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து, அக்.12-இல்

Updated On : 8 அக்டோபர் 2018, 7:52 am IST
பகிர்:

காவிரி டெல்டா மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து, அக்.12-இல் திருவாரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க திட்டமிட்டு, அதற்கான தனியார் நிறுவனங்களைத் தேர்வு செய்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க சில தினங்களுக்கு முன்பு தில்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் போராடி வரும் சூழலில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைந்திருப்பது, தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கக்கூடிய செயலாக உள்ளது. இதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழுவின் சார்பில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி, நன்னிலம், கூத்தாநல்லூர், குடவாசல், வலங்கைமான் ஆகிய 11 இடங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு அக்.12-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.