நுண்கடன் நிறுவனங்கள் தொடர் நெருக்கடி தவிப்பில் சுயஉதவிக்குழு பெண்கள்
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தும்படி,
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட கடன் தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தும்படி, நுண்கடன் வழங்கு நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடி தொடர்வதால் கிராமப்புற பெண்கள் கவலையடைந்துள்ளனர்.
பெண்களின் முன்னேற்றத்துக்காவும், தனிநபர் வருமானத்தை பெருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டவை மகளிர் சுய உதவிக் குழுக்கள். தொடக்கத்தில் சேமிப்பு, நலத்திட்டப் பணிகள் ஆகியவை மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கிய அம்சங்களாக இருந்தன. இக்குழுக்களின் சேமிப்புகளை கருத்தில் கொண்டு வங்கிகள் அவர்களுக்கு கடன் கொடுக்க தொடங்கின. இக்கடன்கள் முறையாக திருப்பிச் செலுத்துவதை அறிந்த வங்கிகள், மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன. தவிர தனியார் நுண் கடன் வழங்கு நிறுவனங்களும் கடன்களை வழங்கத் தொடங்கின. தினசரி, வாரம், மாதம் என கடன் வசூலிப்பில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், கடன்தொகை முழுவதும் செலுத்தப்பட்டவுடன் மீண்டும் அடுத்தக் கடனை கொடுக்கத் தொடங்கின.
இதையடுத்து கடன் வாங்குவதற்காக பெண்கள் குழுக்களாக இணையத் தொடங்கினர். அதாவது 10 அல்லது 15 பெண்கள் இணைந்து கடன் கேட்டால், அவர்களை குழுவாக அங்கீகரித்து கடன் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு பெண், தற்போது 3 குழுக்களில் இருப்பதுடன், 3 குழுக்கள் மூலம் கடன் பெற்றிருப்பது தற்போதைய நிலைமை. இவர்களிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க நியமிக்கப்பட்டுள்ள முகவர், உறுப்பினர்களை காலை 7 மணிக்கு வரவழைத்து தவணைத் தொகையை வசூலிக்கிறார்.
தவணைத் தொகையை யாராவது செலுத்தத் தவறினாலோ அல்லது அந்த உறுப்பினர் இறந்து விட்டாலோ மற்ற உறுப்பினர்கள் இணைந்து தவணைத் தொகையைக் கட்ட வேண்டும். இதனால் சில நேரங்களில் குழு உறுப்பினர்களிடையே சங்கடங்கள் உருவாகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். தினசரி கிடைக்கும் வருவாயைக் கொண்டே அவர்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். அவர்களுக்கு சிறு, குறு மற்றும் நுண் கடன் வழங்கு நிறுவனங்கள் கொடுக்கும் மகளிர் சுய உதவிக்குழு கடன் மிகப்பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது. மேலும் சிறு தொகையாக கடன் தவணைத் தொகை பெறப்பட்டு, கடன்கள் அடைக்கப்படுவதால், அவர்களுக்கு ஓரளவுக்கு சிரமமில்லாமல் இருந்தது.
இந்நிலையில், கஜா புயலால் குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் மட்டுமின்றி மரங்கள், பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போராடி வருகின்றனர். தங்கள் வீடுகளை சரிசெய்யவும், தங்கள் தோட்டம், விளைநிலங்களை சரிசெய்யும் பணிகளில் கடன் தொகையை செலவழித்துவிட்டனர். மேலும் கடந்த 2 மாதங்களாக விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயப் பணிகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் கிடைக்கவில்லை. இதனால் வாழ்வாதாரத்துக்காக அடுத்தவர்களை எதிர் நோக்கியே இருக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கடன் பிரச்னை சில மாதங்களில் சீரடையும் என விவசாயத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேநேரத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தவணைத் தொகையை, அந்தந்த நிறுவனங்கள் கேட்டு நெருக்கடி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. புயல் வீசிச் சென்ற சில நாள்களிலேயே இதுபோன்ற நிலைமை ஏற்பட்டதையடுத்து, ஆறுமாதங்களுக்கு கடன் தவணைத் தொகை வசூலிப்பதை சம்பந்தப்பட்ட கடன் வழங்கு நிறுவனங்கள் ஒத்தி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இது வேண்டுகோளாகவே இருப்பதால், கடன் தொகையை செலுத்த வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்கள் இன்னமும் தீவிரம் காட்டுவதால் சுய உதவிக் குழுவினரிடையே அதிருப்தி நிலவுகிறது.
இதுகுறித்து மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் கூறியது: தினசரி வாழ்வாதாரத்தை நகர்த்தவே சிரமப்பட வேண்டியுள்ளதால், கடன் தவணைத் தொகையை செலுத்துவதற்கு சிரமமாக உள்ளது. ஆட்சியரின் வேண்டுகோளுக்குப் பிறகும் முகவர்கள் தவணைத் தொகையைக் கேட்டு வற்புருத்தி வருகின்றனர். கடன் வாங்கியவர்களில் ஒரு சிலரால் செலுத்த முடியவில்லை. பணம் செலுத்தாதவர்களிடம் முகம் சுளிக்கும்படியாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுகின்றனர். இதனால் வாய்த்தகராறுகள் ஏற்படுகின்றன என்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது: மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வேண்டுகோளா அல்லது உத்தரவா என்பதில் மக்களுக்கு குழப்பம் உள்ளது. எழுத்துப்பூர்வமான ஆணை இல்லாததால், கடன் வழங்கிய நிறுவனங்கள் மக்களுக்கு நெருக்கடி தருகின்றன. புதுக்கோட்டையில் ஓராண்டுக்கு கடன் தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், தொகையை வசூலிக்க வரும் முகவர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுவினருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதேபோல் சிறிய அளவிலான பிரச்னைகள் இங்கேயும் தொடர்ந்து வருகின்றன. எனவே, கடன் தொகை வசூலிப்பை தள்ளி வைக்கும் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் உத்தரவாக பிறப்பிக்க வேண்டும் என்றார்.