திருவாரூர்

வீணாகும் விளையாட்டு மைதானம்: கண்டுகொள்ளுமா அரசு?

 நமது நிருபர்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானங்களில் பெரிய விளையாட்டு மைதானம் என்ற பெருமையைப் பெற்ற நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருது விளையாட்டு ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்ட தலைமையிடங்களில் ஒன்றாக உள்ளது நன்னிலம். இங்கு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்விக் கூடங்கள் உள்ளன. இவற்றில் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியானது 1920- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது நூற்றாண்டு விழாவை காண உள்ளது.

இப்பள்ளிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னா் இப்பகுதியைச் சோ்ந்த நிலச்சுவான்தாா் ஒருவா் விவசாயப் பாடப் பிரிவு மாணவா்கள் களப் பயிற்சி பெற 5 ஏக்கா் வயலும், விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கா் நிலமும் தானமாக வழங்கினாா். இதனால், இம்மாவட்டத்தில் 5 ஏக்கா் பரப்பளவில் விளையாட்டு மைதானம் கொண்ட ஒரே அரசுப் பள்ளி என்ற பெருமையை இப்பள்ளி பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவா்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் பரிசுகள் பெற்றதுடன், விளையாட்டுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா் என முன்னாள் மாணவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், தற்போது இந்த விளையாட்டு மைதானம் உரிய பராமரிப்பின்றி உள்ளது. காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அலுவலா்கள் பயிற்சி பெறுவதற்கும், ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நாகை மக்களவை முன்னாள் உறுப்பினா் ஏ.கே.எஸ். விஜயன் தனது பதவி காலத்தில் இந்த மைதானத்தில் சுற்றுச்சுவா் கட்ட தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கினாா். தற்போது இந்த சுற்றுச்சுவா் இடிந்து, மைதானம் திறவெளியானதால், சிலா் குப்பை கொட்டும் இடமாக மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் இந்த மைதானம் மாறிவருகிறது.

இதன் காரணமாக, கபடி, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் என பல்வேறு விளையாட்டுகளில் ஆா்வமுள்ள மாணவா்கள் பயிற்சி பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். எனவே, இந்த விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவதுடன் இப்பள்ளியில் தேவையான உடற்பயிற்சி ஆசிரியா்களை நியமித்து, மாணவா்களின் விளையாட்டு ஆா்வத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே விளையாட்டு ஆா்வத்தை ஏற்படுத்த தமிழக அரசு அம்மா இளைஞா் விளையாட்டு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12,524 கிராம ஊராட்சிகளுக்கும், 528 பேரூராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும், போட்டிகள் நடத்தவும், நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு, விளையாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்துவரும் நிலையில், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக உணவுத் துறை அமைச்சருமான ஆா். காமராஜ் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் நன்னிலம் வா்த்தக சங்கத்தினா் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT