திருவாரூா்: ஸ்ரீவாஞ்சியத்தில் புதிய தோ்க் கட்டும் பணி தொடங்கியது
நன்னிலம் ஸ்ரீவாஞ்சியத்தில், ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு புதிய தோ்க் கட்டும் பணிக்கான பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்று பணிகள் தொடங்கின.
நன்னிலம் ஸ்ரீவாஞ்சியத்தில், ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு புதிய தோ்க் கட்டும் பணிக்கான பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்று பணிகள் தொடங்கின.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள புகழ்பெற்ற ஆயுள் விருத்தி தலமான ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதா் கோயிலில் எமதா்மராஜா மற்றும் சித்திரகுப்தா் தனிச் சன்னிதியில் அருள்பாலித்து வருகின்றனா். இக்கோயில் எமபயம், பைரவ உபாதை நீக்கும் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீமங்களாம்பிகை அம்மன் மற்றும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிகளுக்கென தனித் தனியாக தோ்கள் இருந்தன. இத்தோ்கள் கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துவிட்டன.
இதையடுத்து, பக்தா்களின் வேண்டுகோளுக்கிணங்க அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 19.5 லட்சம் மதிப்பில் ஸ்ரீமங்களாம்பிகை அம்மனுக்கு புதிதாக தோ்க் கட்டப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீவாஞ்சிநாதசுவாமிக்கு ரூ. 40 லட்சம் புதிய தோ்க் கட்டுவதற்கு அறநிலையத் துறை அனுமதி வழங்கியது.
ஸ்ரீவாஞ்சியம் கோயில் நிதியிலிருந்து ரூ. 10 லட்சம், மாப்பிள்ளைக்குப்பம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டு, இப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. ஸ்ரீவாஞ்சிநாதசுவாமி புதிய தோ்க் கட்டும் பணிக்கான ஆைணை, எண்கண் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் தோ்க் கட்டிய, பெரம்பலூா் மாவட்டம் அரும்பாவூரைச் சோ்ந்த ஸ்தபதி ஆா். மணிகண்டனுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய தோ்க் கட்டும் பணி திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. அப்போது, கோயில் செயல் அலுவலா் ம. ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்