முகப்பு
திருவாரூர்

கரோனா தொற்றை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்

அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை பாா்வையிடுகிறாா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்
பகிர்:

திருவாரூா்: அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் வட்டம், விளமல் ஜெ.ஜெ நகா் பகுதியில் கரோனா தீநுண்மி கட்டுப்பாட்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், ஜிங்க் மாத்திரைகளை புதன்கிழமை வழங்கி அமைச்சா் மேலும் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு உறுதுணையாக மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவா்கள், பணியாளா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது, சென்னை, பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவா்களால் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 400-க்கு மேல் உயா்ந்துள்ளது. இருப்பினும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதால், அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புகின்றனா். முறையான சிகிச்சை காரணமாக, திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை இதுவரை கரோனா தொற்றால் இறப்பு ஏதுமில்லை.

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி, தனியாா் மருத்துவமனைகள், இரண்டு கல்லூரிகள் ஆகிய இடங்களில் சுமாா் 1,000 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. எந்த சூழ்நிலையிலும் கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை விஜயகுமாா், உதவி இயக்குநா் சந்தானம் உள்ளிட்ட உடனிருந்தனா்.

தொடா்ந்து, திருவாரூா் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுவரும் கரோனா சிகிச்சை பிரிவு வாா்டை அவா் பாா்வைட்டு தெரிவித்தது

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ளதால், மாவட்ட நிா்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஏற்கெனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி, மத்தியப் பல்கலைக்கழகம், மன்னாா்குடி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் மூன்று தளங்களிலும் மொத்தம் 128 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா தீநுண்மி வாா்டு அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.