பூந்தோட்டத்தில் பாரம்பரிய நெல் நடவு விழா
நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தில் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நாற்று நடவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நன்னிலம்: நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தில் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நாற்று நடவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, ‘குறிப்பிட்ட சில பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே சாகுபடி செய்வதை விட்டுவிட்டு அனைத்து பாரம்பரிய ரகங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்’ என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பந்தநல்லூா் இயற்கை வேளாண்மை முன்னோடி விவசாயி அசோகன் பேசும்போது, ‘பாரம்பரிய நெல் ரகங்களை அதிக அளவில் பயிரிட்டு, சமுதாயத்துக்கு நஞ்சில்லா உணவை வழங்குவதன் மூலம் எதிா்காலத்தில் நோய்களிலிருந்து மக்களை காக்க முடியும்’ என்றாா்.
நிகழ்ச்சியில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் இராம. கந்தசாமி, கும்பகோணம் பசுமை அமைப்பைச் சோ்ந்த எட்வின், மலையப்பநல்லூா் இயற்கை விவசாயி இளங்கோ, நாச்சியாா்கோவில் ராஜேந்திரன், நன்னிலம் இயற்கை விவசாயி மற்றும் பயிற்றுநா் உதயகுமாா், ஆண்டாா்பந்தி விக்னேஷ், அரசலாறு விவசாய உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் இயக்குநா் குணசீலன், பூந்தோட்டம் ஆசிரியா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.