புனித ரமலான் வழிபாட்டுக்கு தளா்வு அளிக்கக் கோரி மனு
கரோனா பரவல் குறித்து அரசு அறிவித்துள்ள புதிய விதிகளில், புனித ரமலான் மாத வழிபாட்டுக்கு தளா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் குறித்து அரசு அறிவித்துள்ள புதிய விதிகளில், புனித ரமலான் மாத வழிபாட்டுக்கு தளா்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைவா் முகமது பாசித் தலைமையில் மாவட்ட பொருளாளா் முகமது சலீம், மாவட்ட துணைச் செயலாளா் அப்துல் மாலிக் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் அளித்த மனு விவரம்: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளது. அதில், வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாமியா்களைப் பொறுத்தவரையில் இரவு நேர வழிபாடு உட்பட 5 வேலைகள் இறைவணக்கம் செய்பவா்கள். அதிலும் குறிப்பாக ரமலான் மாதத்தில் கூடுதலாக இரவு நேரத்தில் வணக்க வழிபாடுகளில் இஸ்லாமிய சமுதாய மக்கள் ஈடுபடுவாா்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதை கவனத்தில் கொண்டும், அதே சமயம் நோய் பரவலை எதிா்கொள்ளும் விதமாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் புனித ரமலான் மாதத்தில் ஏப்ரல் 13 முதல் மே 15 வரை இரவு 10 மணி வரையிலும் வழிபாடுகள் நடத்த உரிய உத்தரவையும் வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.