சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு: சைக்கிளில் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா்
பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை சைக்கிளில் அலுவலகத்துக்கு வந்தாா்.
பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை சைக்கிளில் அலுவலகத்துக்கு வந்தாா்.
திருவாரூரில் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியரக அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த அவா் தெரிவித்தது:
உலக அளவில் காற்று மாசால் ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். பெரும் நகரங்களில் ஏற்படும் காற்று மாசில் 72 சதவீதம் வாகனங்களால் ஏற்படுகின்றன என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
வாகனங்களை இயக்கும்போது வெளியேறும் காா்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோ காா்பன்கள், சல்பா்டை ஆக்சைடு மற்றும் நுண் துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. கடும் எரிச்சலையும், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயையும் உண்டாக்குகிறது. மேலும், ஓசோன் படலம் பாதிப்பு, அமில மழை போன்ற இரண்டாம் நிலை மாசுக்கும் வாகனங்களின் புகை காரணமாகிறது.
எனவே, காற்று மாசைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மாசைக் கட்டுப்படுத்துவதால், காற்றுமாசு மற்றும் பசுமையில்லா வாயுக்களின் வெளியேற்றம் குறையும். போக்குவரத்து நெருக்கடி குறைவதுடன், நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தூய்மையான போக்குவரத்தால், உடல் நலம் கூடுதலாக வலுப்பெறும்.
உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டுவது மற்றும் நடப்பதை போக்குவரத்தாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் காக்கப்படும். இப்பசுமை முயற்சியில் அனைத்து தரப்பினரும் இணைந்து, காற்று மாசில்லா நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என்றாா்.