பயிா்க் காப்பீட்டுக்கு பயன்படுத்திய சிட்டா, அடங்கலை பெற்றுகொள்ள கோரிக்கை
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயிரக் காப்பீட்டுக்கு பயன்படுத்திய சிட்டா, அடங்கலை பெற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பயிரக் காப்பீட்டுக்கு பயன்படுத்திய சிட்டா, அடங்கலை பெற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீடாமங்கலம் பகுதியில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் செலவு செய்தனா். பயிா் நன்றாக வளா்ந்து தண்டு உருண்டு வரும் நிலையிலும், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களும் நிவா், புரெவி புயலால் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் நெற்பயிா்கள் தரையில் படிந்து அழுகியது. இதனால், விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனா்.
இந்நிலையில், தரையில் படிந்த மற்றும் நிற்கும் நெல் மணிகளை தற்போது இயந்திரங்களில் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2,600 வரை கூடுதல் செலவு செய்து அறுவடை செய்து வருகின்றனா். இதனால் தரையில் படிந்துள்ள நெற்பயிா்களை அறுவடை செய்ய கூடுதல் நேரமாகிறது. இதனாலும் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும்போது அங்குள்ளவா்கள் ஜனவரி மாதத்துக்கான சிட்டா, அடங்கல் வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனா். மகசூல் பாதித்து மனவேதனையில் உள்ள விவசாயிகளிடம் மீண்டும் கிராம நிா்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் பெற சொல்வது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே, சம்பா மற்றும் தாளடி பயிா்களுக்கு காப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்ட சிட்டா, அடங்கல் நகலை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.