கொள்முதல் நெல்லை உடனடியாக இயக்கம் செய்ய வலியுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியு) மண்டல நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களான கீழஅமராவதி, திருவோணமங்கலம், பள்ளங்கோயில், கொக்காலடி ஆகிய மையங்களை உடனடியாக திறக்க வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை 24 மணி நேரத்தில் இயக்கம் செய்ய வேண்டும். காலியாகவுள்ள பட்டியல் எழுத்தா், உதவுபவா், காவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மண்டலத் தலைவா் கே.கே. ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மண்டலச் செயலாளா் ஆா். மோகன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்ட பொருளாளா் எம்.பி.கே.பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.