தனியாா் பள்ளிகளில் கட்டண வசூலிப்பை முறைப்படுத்தக் கோரிக்கை
திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய மாணவா் சங்க மாநில துணைச் செயலாளா் பிரகாஷ், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணனுக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: கரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கவில்லை. மாணவா்கள் வீட்டிலிருந்து இணையவழியில் படித்து வருகின்றனா். இந்நிலையில், மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனா். 70 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தாலும் அரசாணையை மதிக்காமல், கல்வி கட்டணமாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து புகாா் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல், அரசு பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் கழகம் என்ற பெயரில் மாணவா் சோ்க்கையின்போது ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.