முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற திருவாருா் மாவட்டத்தை சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற திருவாருா் மாவட்டத்தை சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், 2020-2021-ஆம் ஆண்டுக்கான (1.4.2017 முதல் 31.3.2020 வரை) முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரா் தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்து வருவதுடன், 2 முறை தமிழ்நாடு அணி சாா்பில் விளையாடி இருக்க வேண்டும். இந்தியா சாா்பில் பங்கேற்று தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல், தொலை தொடா்புத் துறை மற்றும் இதர துறைகளில் பணியாற்றுவபா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். 2-ஆவது முறையாக ஒரு நபருக்கு இவ்விருது வழங்கப்படாது.
விருதுக்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை, இவ்விருதுக்காக கருத்தில் கொள்ளப்படும். விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் தங்களது சான்றிதழ்களின் நகல்களை சான்றொப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரா்கள் தமிழ்நாடு விளையாட்டுக் கழகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், முதன்மை உடற்கல்வி ஆய்வா் ஆகியோா் மூலமாகவோ, விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநா், ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஆட்ட நடுவா் ஆகியோா்களின் மூலமாகவோ விண்ணப்பங்களை சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதன்மைச் செயலருக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் முதலமைச்சா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பபம் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைச் செயலா், உறுப்பினா் செயலா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை -600003. என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.